

ஜம்மு காஷ்மீ்ர மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய அரசின் பிடிவாதம் மற்றும் ஆதிக்க மனப்பான்மைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி, லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல்வேறு தரப்பு சார்பில் பொதுநல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
‘‘தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பை காப்பது நீதிமன்றத்தின் கடமை. இணையதளம் என்பதும் கருத்துரிமையின் ஒருபகுதியே. மிக மிக அசாதரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும். காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது. 7 நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது:
‘‘ஜம்மு காஷ்மீ்ர மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய அரசின் பிடிவாதம் மற்றும் ஆதிக்க மனப்பான்மைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும். காஷ்மீரில் நடந்த கெடுபிடிகளுக்கு முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கே காரணம். இதற்கு அவர் முழு பொறுப்பேற்க வேண்டும். தற்போது கோவா மாநிலத்தின் ஆளுநராக உள்ள அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.