

லோக்பால் அமைப்பின் உறுப்பினர் பதவியை நீதிபதி திலிப் பி.போஸ்லே ராஜினாமா செய்துள்ளார்.
உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியது. லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதிபதவியேற்றார்.
மேலும் நீதித்துறையைச் சேர்ந்த4 பேரும் நீதித்துறை அல்லாத4 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். நீதித்துறையைச்சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவராக நீதிபதி திலிப் பி.போஸ்லே உட்பட உறுப்பினர்கள் 8 பேரும் கடந்த மார்ச் 27-ம் தேதி பதவியேற்றனர்.
இந்நிலையில், லோக்பால் உறுப்பினர் பதவியில் இருந்து திலிப் பி.போஸ்லே ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக லோக்பால் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திலிப் பி.போஸ்லே தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.63 வயதான போஸ்லே, அலகாபாத் மற்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார். போஸ்லே ராஜினாமா செய்துள்ளதால் லோக்பால் அமைப்பில் காலியாக உள்ள இடத்துக்கு நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.