

மும்பை காவல்துறை ஆணையர் சஞ்சய் பார்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஏஜாஸ் லக்டாவாலா, மும்பையில் 25 வழக்குகள் உட்பட மகாராஷ்டிராவில் 27 வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் பாட்னாவில் பதுங்கியிருந்த அவரை பிஹார் போலீஸார் உதவியுடன் மும்பை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இதையடுத்து அவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜனவரி 21 வரை போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக சுமார் 80 பேர் புகார் அளிக்க முன்வந்துள்ளனர்” என்றார். மும்பை காவல்துறை இணை ஆணையர் சஞ்சய் சக்சேனா கூறும்போது, “தாவூத் இப்ராஹிமை விட்டு பிரிந்த பிறகு சோட்டா ராஜனுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஏஜாஸ் ஈடுபட்டு வந்தார். 2008-ல் ராஜனை விட்டுப் பிரிந்த அவர் தனியே செயல்படத் தொடங்கினார். கனடா, மலேசியா, அமெரிக்கா, லண்டன் மற்றும் நேபாளத்தில் ஏஜாஸ் தங்கியிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்ததது. இதுகுறித்து விசாரிப்போம்.
கடந்த 6 மாதங்களாக ஏஜாஸை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தோம். ஏஜாஸின் மகள் ஷிபா ஷாகித் ஷேக் கடந்த 28-ம் தேதி நேபாளம் தப்பிச் செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஏஜாஸை கைது செய்வது சாத்தியமானது” என்றார்.- பிடிஐ