

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக குறிப்பாக தேர்தல் நேரங்களில் பிளாஸ்டிக் பேனர், கொடிகள் பயன்பாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக எட்வின் வில்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், “தேர்தல் நேரங்களில் பிளாஸ்டிக் பேனர்கள் பயன்பாடு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் பலனளிக்கும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பிறகு குப்பையில் வீசப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.- பிடிஐ