

கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,34,516 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மகாராஷ்டிரா (17,972), தமிழ்நாடு (13,896), மேற்கு வங்கம் (13,255), மத்திய பிரதேசம் (11,775), கர்நாடகா (11,561) ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 50.9 சதவீதம் பேர் ஆவர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 7.7 சதவீதம் பேர் (10,349) விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள். எனினும், கடந்த 2016-ம்ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைவிட (11,379) இது குறைவு. எனினும், கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, உத்தராகண்ட், மேகாலயா, கோவா, சண்டிகர், டாமன் டையு, டெல்லி, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது