

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் உள்ள காந்தி நகர், கன்னட திரையுலகின் தலைநகரமாக கருதப்படுகிறது. இங்கு கன்னடம் அல்லாத பிறமொழி திரைப்படங்களை திரையிட கன்னட அமைப்பினரும், திரைத் துறையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு,மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று வெளியானது.பெங்களூருவில் உள்ள காந்தி நகரில் நர்த்தகி திரையரங்கில் தர்பார் (தெலுங்கு) திரைப்படத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. திரையரங்கு வாசலில் பெரிய அளவில் ரஜினி ‘கட் அவுட்’ வைக்கப்பட்டு, அவரது ரசிகர் மன்ற கொடிக்கு பதிலாக கன்னட கொடி (மஞ்சள் சிவப்பு வண்ணக் கொடி) கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் திரையரங்கு முன்னால் கன்னட ரக் ஷன வேதிகேஅமைப்பினர் குவிந்தனர். இவர்கள் ‘தர்பார்’ திரைப்படத்துக்கு எதிராகவும், நடிகர் ரஜினிக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். காந்தி நகரில் கன்னட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும், பிறமொழி படங்களை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளரிடம் எச்சரித்தனர். இதனால் கன்னட அமைப்பினர் - ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதனிடையே அங்கு விரைந்து வந்த போலீஸார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும்மேற்பட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர். கன்னட அமைப்பினரின் திடீர் போராட்டத்தால் ‘தர்பார்’ திரைப்படத்தின் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ‘தர்பார்’ திரைப்படம் பிற்பகல் முதல் திரையிடப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.