டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இருவேறு நிலைப்பாடுகள் எடுக்கும் மாயாவதி, அகிலேஷ் 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இருவேறு நிலைப்பாடுகள் எடுக்கும் மாயாவதி, அகிலேஷ் 
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) மற்றும் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் (எஸ்பி) இருவேறு நிலைப்பாடுகள் எடுத்துள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் பிஎஸ்பி போட்டியிட, எஸ்பி விலகி நிற்கிறது.

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 9-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த பொதுமக்கள் டெல்லியில் அதிகம். இதில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆதரவைப் பெற ஒவ்வொரு தேர்தலிலும் மாயாவதி முயல்வது உண்டு.

இதன் 12 தனித்தொகுதிகளில் கடைசியாக 2008 தேர்தலில் இரண்டு எம்எல்ஏக்கள் கிடைத்தனர். எனினும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பலன் பெற்றதில்லை. இருப்பினும், மாயாவதி தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தனது பிஎஸ்பி வேட்பாளர்களைப் போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பிஎஸ்பி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''டெல்லியின் அனைத்து 70 தொகுதிகளிலும் பிஎஸ்பி போட்டியிடும் என எங்கள் தலைவி பெஹன்ஜி கூறியுள்ளார். இதற்காக, டெல்லியை ஒட்டி இருக்கும் உ.பி.யின் மேற்கு பிரதேச மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளார்'' எனத் தெரிவித்தனர்.

மாயாவதியின் தாழ்த்தப்பட்ட வாக்களார்களைக் குறி வைத்து உ.பி.யின் சஹரான்பூரைச் சேர்ந்த பீம் ஆர்மி கட்சியின் தலைவரான சந்திரசேகர ஆசாத்தும் ஒரு கட்சியை நடத்துகிறார். இவரும் டெல்லி தேர்தலில் போட்டியிட்டால் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுக்குச் சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உ.பி.யில் ஆட்சி செய்த எஸ்பி டெல்லி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. இதற்கு பாஜகவிற்கு எதிரான மதச்சார்பாற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பது காரணமாக உள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியும், அகிலேஷும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். இதில் மாயாவதிக்குச் சிறிதளவு கிடைத்த பலன் அகிலேஷுக்குக் கிடைக்கவில்லை.

இதனால், இரண்டு கட்சிகளும் இனி கூட்டணி அமைப்பதில்லை எனப் பிரிந்து விட்டனர். இவர்கள் டெல்லி தேர்தலிலும் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். இதன் பிறகு, பாஜகவிற்கு எதிராக பல்வேறு சமயங்களில் ஒரே மேடை ஏறும் எதிர்க்கட்சிகளுடனும் மாயாவதி சேர்வதில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்தத் தேர்தலில் கடும் போட்டி உள்ளது. இதனை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜகவுடன், காங்கிரஸும் தீவிரமான முனைப்பு காட்டுகிறது.

இதனால், ஆம் ஆத்மி, காங்கிர கட்சிகளால் பிரியும் வாக்குகள் தனக்கு லாபம் ஏற்படுத்தும் என பாஜக நம்புகிறது. இத்துடன் மாயாவதி போன்றவர்களின் நிலைப்பாடுகளும் பாஜகவிற்கு லாபம் தருவதாக உள்ளது. எனினும், இது ஆட்சி அமைக்க உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in