

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அகிலேஷ் யாதவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து அபர்ணா யாதவ் கூறியதாவது:
குடியுரிமைச் சட்டம் இந்தியர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பு இல்லை. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியர்கள் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காகவே குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. இந்த உண்மையை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.’’ எனக் கூறினார்.