

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019- 2020 நிதியாண்டில் 5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்துத. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.
பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். பொருளாதார வளர்ச்சி மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை, வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை, கட்டமைப்பு திட்டங்களுக்குச் செலவிடவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019- 2020 நிதியாண்டில் 5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி குறைந்து இருப்பதும், வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது குறைந்து வருவதும் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.