Last Updated : 09 Jan, 2020 03:58 PM

 

Published : 09 Jan 2020 03:58 PM
Last Updated : 09 Jan 2020 03:58 PM

பூலான் தேவியை சம்பல் கொள்ளைக்காரியாக்கிய நிலம்: 90 வயதில் நீதிக்காகக் காத்திருக்கும் தாய்

தன் உறவினர் மாயா தின் என்பவருடன் 4 பிகாக்கள் நிலத்துக்காக ஏற்பட்ட சண்டையில் 40 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கியைத் தூக்கி சம்பல் கொள்ளைக்காரியான பூலான் தேவி குடும்பத்துக்கு இன்னும் கூட அந்த நிலம் கைக்கு வரவில்லை.

ஜலவ்ன் மாவட்டத்தில் உள்ள பூலான் தேவியின் கிராமத்தில்தன இந்த நிலம் உள்ளது.

இந்த நிலம் முதலில் பூலான் தேவி தந்தை வசம் இருந்தது. இவர் மறைவுக்குப் பிறகு மனைவி மூலா தேவி நிலத்தின் உரிமையாளரானார்.

இந்நிலையில் பூலான் தேவி தந்தை தேவி தின் மல்லாவின் அண்ணன் மகன் மாயா தின் அந்த நிலத்தைப் பிடுங்கி, இவர்களை நிலத்தைப் பயன்படுத்த விடாமல் தடுத்தார். பரம்பரை உரிமைப்படி அந்த நிலம் தனக்குச் சொந்தமானதே என்று மாயா தின் வாதாடினார்.

மூலா தேவி கூறும்போது, “என் மகள் பூலான் இந்த நிலத்திற்காகத்தான் மாயா தின்னுடன் சண்டையிட்டார். ஆனால் மாயா தின் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் என் மகள் பூலான் தேவியை கேலியும் கிண்டலும் செய்ததோடு வசைமாரி பொழிந்தனர். இதனையடுத்தே என் மகள் பூலான் தேவி இன்னும் சில பெண்களைச் சேர்த்துக் கொண்டு நிலத்துக்காக தர்ணா போராட்டம் நடத்தினார்.

கிராமப் பெரியவர்கள் நிலத்திலிருந்து பூலான் தேவியையும் மற்ற பெண்களையும் விரட்டியடிக்க முயன்றனர் ஆனால் தோல்வியடைந்தனர். பிறகு மாயா தின் செங்கலைத் தூக்கி பூலான் தேவி மீது அடிக்க பூலான் தேவி நினைவிழந்தார். இதன் பிறகுதான் பூலான் தேவி போராளியாக மாறினார்” என்றார்.

மாயா தின் பூலான் தேவியை தாக்கூர் கொள்ளைக் கூட்டத் தலைவன் லால் ராம், ஸ்ரீராம் ஆகியோரிடம் விற்று விட்டதாகக் கூறப்பட்டது. இவர்கள் பூலான் தேவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியதோடு சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.

சில ஆண்டுகள் சென்ற பின்னர் பூலான் தேவிக்கும் இன்னொரு கொள்ளையன் விக்ரம் மல்லாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த விக்ரம் மல்லாவை லாலா ராம், ஸ்ரீராம் கும்பல் கொலை செய்தது.

இதற்குப் பழித்தீர்க்க பூலான் தேவி மெதுவே தன் கொள்ளைக்கும்பலை உருவாக்கி வந்தார். பிறகு பிப். 14, 1981-ல் அந்த பயங்கரநாள் வந்தது. பேஹ்மாய் கிராமத்துக்குள் தன் கும்பலுடன் ஆயுதங்களுடன் நுழைந்த பூலான் தேவி அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கூர் பிரிவினரில் 22 ஆண்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுத்தள்ளினார். நாடே அதிர்ந்தது

மத்தியப் பிரதேச அரசிடம் இவர் 1983-ல் சரணடைந்தார், பிறகு 1994-ல் சரணடைந்தார். முலாயம் சிங் யாதவ் அரசு பூலான் தேவி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றதில் பூலான் தேவி சுதந்திரமாகத் திரிந்தார்.

பிறகு அரசியலில் சேர்ந்த பூலான் தேவி இரண்டு முறை எம்.பி. பதவி வகித்த நிலையில் 2001-ல் டெல்லியில் கொல்லப்பட்டார்.

பேமாய் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, அடுத்த வாரம் இதில் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் மீண்டும் பூலான் தேவி பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தாயார் மூலா தேவி கூறும்போது, “என் நிலத்தை நான் என் காலத்துக்குள் மீட்கவில்லை எனில், குடும்பத்திற்காக பூலான் தேவி செய்த தியாகங்கள் விரயமாகிப் போகும்” என்றார்.

ஜலவ்ன் மாவட்ட அதிகாரிகளும் அரசு ஆவணங்களைச் சரிபார்த்து நில உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்து கொண்டு உரிய நீதி வழங்கப்படுமென்றார்.

தன் 90 வயதில் நீதிக்காகக் காத்திருக்கிறார் மூலா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x