Last Updated : 08 Jan, 2020 05:24 PM

 

Published : 08 Jan 2020 05:24 PM
Last Updated : 08 Jan 2020 05:24 PM

பிஹெச்இஎல் உள்பட 6 பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), எம்எம்டிசி, ஒடிசாவில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று டெல்லியில் கூடி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது. மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதன்படி எம்எம்டிசி, தேசிய கனிவள மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி), பாரத மிகுமின் நிறுவனம் (பிஹெச்இஎல்), ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா முதலீட்டுக் கழகம், எம்இசிஓஎன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது.

மேலும், நீலாஞ்சல் ஸ்பாட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதித்துள்ளது.

நீலாஞ்சல் ஸ்பாட் நிறுவனத்தில் எம்எம்டிசி நிறுவனம் 49 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதேபோல ஒடிசா சுரங்கக் கழகத்திலிருந்து 20 சதவீதப் பங்குகளையும், ஒடிசா முதலீட்டுக் கழகத்தில் 12 சதவீதப் பங்குகளையும், என்எம்டிசி நிறுவனத்தில் இருந்து 10 சதவீதப் பங்குகளையும் அரசு விற்பனை செய்ய இருக்கிறது. பிஹெச்இஎல், எம்இசிஓஎன் நிறுவனத்தில்இருந்து தலா 0.68 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது

ஒடிசா தொழில்துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கழகம் (ஐபிஐசிஓஎல்) நிறுவனத்தில் இருந்து 12 சதவீதப் பங்குகளையும், ஒடிசா சுரங்கக் கழகத்தில் இருந்து 27 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் நீலாஞ்சல் இஸ்பட் நிகம் லிமிட் (என்ஐஎன்எல்) நிறுவனத்தின் பங்குகள் இரு கட்டங்களாக விற்பனை செய்யப்படும். இந்தப் பங்குகள் விற்பனையில் இருந்து கிடைக்கும் நிதி சமூக மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்''.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x