Published : 07 Jan 2020 08:15 PM
Last Updated : 07 Jan 2020 08:15 PM

என் மகனை மன்னித்து விடுங்கள்: நிர்பயா வழக்குக் குற்றவாளியின் தாய் நீதிமன்றத்தில் கதறல்

டெல்லி நீதிமன்றம் இன்று நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டதையடுத்து குற்றவாளி ஒருவரின் தாயார் ‘என் மகனை மன்னித்து விடுங்கள்’ என்று கதறி அழுதார். நீதிபதியிடமும் நிர்பயா தாயாரிடமும் மன்றாடினார்.

முகேஷ் சிங்கின் தாயார் கோரிக்கையை ஏற்க மறுத்தார் நீதிபதி, நிர்பயா தாயிடம் முறையிட்ட போது, அவர், “எனக்கும் மகள் இருந்தாள்” என்று முறையிட்ட தாய்க்கு பதில் அளித்தது உருக்கமான காட்சியை அங்கு ஏற்படுத்தியது.

விசாரணையின் போது கடைசி நேரத்தில் கோர்ட் அறைக்குள் நுழைந்த குற்றவாளியின் தாய், கெஞ்சும் தோரணையில் தன் புடவையைப் பிடித்திருந்தார்.

“என் மகனை மன்னித்து விடுங்கள், நான் உங்களை மன்றாடுகிறேன், அவன் உயிருக்காக நான் யாசகம் கேட்கிறேன்” என்று கதறி அழுதார்.

ஆனால் நிர்பயாவின் தாய், “எனக்கும் மகள் இருந்தாள், அவளுக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் எப்படி மறக்க முடியும். நான் இந்த நீதிக்காக 7 ஆண்டுகள் காத்திருந்தேன்” என்று பதிலளித்தார்.

இவர்கள் இருவரின் உரையாடலும் கோர்ட் அறைக்குள் இறுக்கமான, உருக்கமான காட்சிகளை உருவாக்க, நீதிபதி ‘சைலன்ஸ்’ என்று உத்தரவிட்டார்.

குற்றவாளியின் தாயார் உடனே நீதிபதி முன்பு மன்னிப்பு காட்டுங்கள், என் மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் நீதிபதி தன் இருக்கையிலிருந்து கிளம்பிவிட்டார்.

பிற்பாடு கோர்ட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அந்தத் தாயார், தன் மகன் ஏழை என்பதால் தண்டிக்கப்பட்டுள்ளான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x