

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை(புதன்கிழமை) வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், வங்கிப்பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அனைத்து வங்கிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் பங்குச்சந்தையில் ஏற்கனவே தெரிவித்துவிட்டால், வங்கிப்பணிகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் வங்கி தொடர்பான பணிகள், ஏடிஎம் களில் பணம் எடுப்பது போன்றவற்றை இன்றே திட்டமிட்டுக் கொள்ளவது நலம்.
பல்வேறு வங்கி பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஏஐபிஇஏ, அனைத்து இந்திய அதிகாரிகள் கூட்டமைப்பு, பிஇஎப்ஐ, ஐஎன்பிஇஎப், ஐஎன்பிஓசி, பேங்க் கர்மச்சாரி சேனா மகாசங் உள்ளிட்ட அமைப்புகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
இதனால் வங்கிச்சேவைகளான காசோலை பரிவர்த்தனை, டெபாசிட் , பணம் எடுத்தல், வரைவோலை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்படலாம். ஆனால், தனியார் வங்கிகளின் சேவை பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நடக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாளை 25 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு,எல்பிஎப், யுடியுசி உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்கின்றன.
வேலைநிறுத்தம் குறித்து 10 மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2020, ஜனவரி 2-ம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பணியாளர்கள் தேவையைக் கோரிக்கையை நிறைவேற்ற எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. தொழிலாளர்களை அணுகுமுறை, செயல்களை மதிக்கக்கூடாது என்ற மனநிலையில் அரசு இருக்கிறது.
2020, ஜனவரி 8-ம்தேதி நடக்கும் (நாளை) நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 25 கோடி பேருக்கும் குறைவில்லாமல் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது