

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கிரிமினல் குற்றம், ஜனநாயக மதிப்புகளைக் கொலை செய்யும் செயல் என்று மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கண்டித்துள்ளனர்
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றை எதிர்த்து பேரணி நடத்தியபோது, முகமூடி அணிந்த ஒரு கும்பல் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு முக்கிய பிரபலங்களும் தாக்குதலைக் கண்டித்து வருகின்றனர்.
மலையாள திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளன. மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
அறிவை, கல்வியைப் போதிக்கும் இடத்துக்குள் புகுந்து சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், கட்டற்ற வன்முறையை மாணவர்கள் மீது நடத்தியது அனைத்து ஜனநாயக மதிப்புகளையும் கொலை செய்ததாகும். இது கிரிமினல் குற்றம், இதைச் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
எந்த சிந்தாந்திற்கு ஆதரவாக இருக்கிறீர்கள், என்ன காரணத்துக்காகப் போராடுகிறீர்கள், இதனால் என்ன முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள், வன்முறை, காழ்ப்புணர்ச்சி ஆகியவை ஒருபோதும் எந்த விஷயத்குக்கும் தீர்வாகாது, பதில் அளிக்காது.
அஹிம்சையின் மூலமும், ஒத்துழையாமை இயக்கத்தின் மூலமும் ஆங்கிலேயர்களை வென்று இருந்து தேசம் சுதந்திரம் பெற்றது. ஆனால், புரட்சி என்பது இன்றைய சூழலில் வன்முறையாகவும், சட்டத்துக்குப் புறம்பாக இயல்பாகவே எடுக்கப்படுவது வருத்தமாக இருக்கிறது.
மற்றொருவிஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள் வன்முறையை ஆதரிக்கும் எந்தவிதமான போராட்டமும் கண்டனத்துக்குரிய செயலாகும்" இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் பேஸ்புக்கில் கூறுகையில், " ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த போது, நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். தேசத்தின் அறிவாலயமாக ஜேஎன்யு மதிக்கப்படுகிறது. இங்கிருந்து ஏராளமான தலைவர்களும், ஆட்சியாளர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல் வேறாக இருக்கலாம், ஆனால், அவர்களின் தேசப்பற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது.
சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் வெளிஆட்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. இதை வாய்மூடிப் பார்க்க முடியாது. மாணவர்களுக்காக ஆதரவாக இருப்பது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கூறுகையில், " பெருமைக்குரிய முன்னோடியான பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிலர் கோழைத்தனமாக முகத்தை மூடிக் கொண்டுதாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு எதிராக இங்கிருக்கும் முறை நிற்பதில் தோல்வி அடைந்துவிட்டது, இந்த தேசத்தில் ஏதோ தீவிரமாகவும், தவறாகவும் நடக்கிறது.
உங்களுடைய அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும்,இங்கு அனைத்தும் இயல்பாக இருக்கிறது என்று நம்பினால், நீங்கள் ஏதோ மோசமான தவறு செய்கிறீர்கள். தாக்குதல் நடத்திய கோழைகளைப் பிடிக்காமல், தண்டிக்காமல் இருக்கும்வரை இந்த தேசம் தூங்கப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்
நடிகர் முரளி கோபி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ஜேஎன்யு பல்கலையில் கறுப்புச்சட்டை தீவிரவாதம். பாசிஸ கருந்துளைக்குள் ஜனநாயகத்தின் சீரான வீழ்ச்சியின் மற்றொரு அச்சுறுத்தும் அடையாளம் என்று வரலாறு தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்
நடிகர் நிவின் பாலி குறிப்பிடுகையில், " மாணவர்கள் மீதான தாக்குதல் கொடூரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டார். நடிகையும் இயக்குநரான கீது மோகன்தாஸ் குறிப்பிடுகையில், " இங்கு என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது, குழந்தைகளுக்கு எதிரான போர்" எனத் தெரிவித்துள்ளார்