Last Updated : 07 Jan, 2020 01:28 PM

 

Published : 07 Jan 2020 01:28 PM
Last Updated : 07 Jan 2020 01:28 PM

'தேசவிரோத செயலை பொறுக்க முடியாது': ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பேற்பு

இந்து ரக் ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்கிற பூபேந்திர யாதவ்: படம் |ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை பொறுக்க முடியவில்லை என்று மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு முழுப் பொறுப்பேற்பதாக இந்து ரக் ஷா தளம் அமைப்புத் தெரிவித்துள்ளது.

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் பேரணி நடத்தியபோது முகமூடி அணிந்த மர்ம கும்பல் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது.

இதில் மாணவர்களுக்கும், முகமூடி அணிந்த கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில், பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் 32 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு நகரங்களில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மாணவர்கள் அமைப்பினர் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல்குறித்து டெல்லி போலீஸார் அடையாளம் தெரியாதவர்கள் எனக் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாஜகவின் ஆதரவு பெற்ற ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று காயமடைந்த ஜேஎன்யு மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஏபிவிபி அமைப்பினர், தாக்குதல் நடத்தப்பட்ட எங்கள் தரப்பிலான மாணவர்கள் பல்கலைக்கழக்தில் இருந்த அவர்களை இடதுசாரி அமைப்பினர் திட்டமிட்டுத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தீவிரமடைந்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், தாக்குதலுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக இந்து ரக் ஷா தளம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்து ரக் ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்கிற பூபேந்திர யாதவ் நிருபர்களிடம் டெல்லியில் இன்று கூறுகையில், " ஜேஎன்யு பல்கலைக்கழகம் தேசவிரோத செயல்களில் நடக்கும் முக்கியத் தளமாக மாறிவிட்டது. தேசத்தையும், மதத்தையும் அவமதிக்கிறார்கள். இதுபோன்ற மனநிலை தேசத்துக்கு விரோதமானது. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது.

மாணவர்கள் மீதானதாக்குதலுக்கு நாங்கள் முழுப்பொறுப்பு ஏற்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதேபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்தாலும் இதேபோன்று தான் நடவடிக்கை எடுப்போம் " எனத்தெரிவித்தார்

பிங்கி சவுத்ரி வாக்குமூலத்தைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, முகமூடி அணிந்த நபர்களைப் பிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடியோ வெளியான பின் ட்விட்டரில் இந்து ரக் ஷா தளம் பெயர் ட்ரன்டானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x