

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சிவேசேனா கட்சி, " பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்பியது நடந்துவிட்டது. இந்த தேசத்தில் இதற்கு முன் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான அரசியலைப் பார்த்தது இல்லை" என்று சாடியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் உருட்டுக்கட்டைகள், கம்பிகள் கொண்டு ந நடத்திய தாக்குதலில் 34 மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி்ட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாஜக ஆதரவு பெற்ற ஏபிவிபி சங்கம் காரணம் என்று ஜேஎன்பு மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர்தான் காரணம் என்று ஏபிவிபி சங்கம் குற்றம்சாட்டுகிறது.
இந்த சூழலில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடோன சாம்னாவில் ஜேஎன்யுவில் நடந்த வன்முறை குறித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மும்பையில் தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகின்றன. மும்பை தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதிகள் இதுபோலத்தான் முகமூடி அணிந்து கொண்டுவந்தார்கள். இங்கேயும் முகமூடி அணிந்து தாக்கியவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.
ஜேஎன்யு பல்கலைக்கழக்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபின் அடையாளம் தெரியாதவர்கள் என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது நகைப்புக்குரியது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்துக்குள் முகமூடி அணிந்து கொண்டு தெரியாதவர்கள் எவ்வாறு நுழையமுடியும்.
இந்த தேசத்தில் ஜேஎன்யு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று எங்கும் பார்த்தது இல்லை. பிரதமர் மோடி ,அமித் ஷா என்ன விரும்பினார்களோ அது நடந்துவிட்டது. இந்த தேசம் ஆபத்தில் இருக்கிறது. பிளவுபடுத்தும் அரசியல் தேசத்துக்கு மிக ஆபத்தானது.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி ரத்தக்கறை படிய அனுமதிப்பது, கொந்தளிப்பான சூழலில் அரசியல் செய்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான அரசியலை இதற்கு முன் எங்கும் பார்த்தது இல்லை. சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாணவர்கள் மீதான தாக்குதல் பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள மக்களிடம் குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதில் அமித் ஷா பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச்சட்டம் தொடர்பாக இன்னும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் நிலவி வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்ள பாஜக விரும்பியது. ஆனால், அது நடக்கவில்லை. இந்துக்கள் இந்த சட்டத்தால் பாதிக்கப்படவில்லை என்பதால், தேசிய அளவில் முஸ்லிம்கள் மட்டுமே இந்த சட்டத்துக்கு எதிராகப் போரடி வருகின்றனர்.
குடியுரிமைத் திருத்தச்சட்டம் விவகாரத்தில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு எதிராக மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கிறார்கள். ஜேஎன்யு தாக்குதலுக்குப் பின்புலத்தில் கூட பழிவாங்கலின் ஒருபகுதியாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம்.
வன்முறையைக் கண்டித்துள்ள பாஜக, அரசியலில் இருந்து பல்கலைக்கழகங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வன்முறையையும், அரசியலையும் பல்கலைக்கழகத்துக்குள் யார் கொண்டு வந்தது. அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் சித்தாந்தங்களை ஏற்காதவர்களை அழிக்கும் கொள்கையை யார் கொண்டு வந்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஏற்காத மாணவர்களைத் தேச விரோதிகள் என்று யார் கூறியது. அவ்வாறு கூறியவர்களே தேசவிரோதிகள்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வன்முறையை பரப்புகிறார்கள் என்று அமித் ஷா குற்றம்சாட்டுகிறார். மக்களை வீதிக்குக் கொண்டுவரும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் விழிப்புணர்வு ஊட்ட அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
அவர்கள் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும், அவரின் கட்சியும், புதிய குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து மக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி தங்கள் நிலையை விளக்கி வருகிறார்கள்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது