Published : 07 Jan 2020 12:15 PM
Last Updated : 07 Jan 2020 12:15 PM

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மும்பையில் திரண்ட மாணவர்கள்: காஷ்மீர் ஆதரவாளர்கள் ஊடுருவல்? -கேட் வேயை விட்டு வெளியேற்றிய காவல்துறை

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக மும்பை ‘கேட் வே ஆப் இந்தியாவில்’ மாணவர்கள் திரண்ட நிலையில் அவர்களுடன் காஷ்மீர் ஆதரவு போராட்டக்காரர்கள் ஊடுருவியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்கு பிறகு மாணவர்களை அங்கிருந்து போலீஸார் வெளியேற்றினர்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜகவின் ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையில் பிரசித்தி பெற்ற பகுதியும், நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இடமுமான கேட் வே ஆப் இந்தியாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அவர்கள் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதராக குரல் எழுப்பினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போல மும்பை ‘கேட் வே ஆப் இந்தியாவிலும்’ பெருமளவு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் #Mumbai என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆனது.

‘கேட் வேயில்’ திரளுவோம் என்ற முழக்கத்துடன் மும்பை முழுவதும் நேற்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனால் நேற்று இரவு வரை அங்கு பெரும் கூட்டம் கூடியது. நகரின் முக்கிய பகுதியான இங்கு அதிகஅளவில் மாணவர்கள் திரண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுமட்டுமின்றி திடீரென போராட்டத்தில் சிலர் காஷ்மீரை விடுவிப்போம் என்ற பதாகைகளை காட்டியவாறு போராடினர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் காஷ்மீர் ஆதரவாளர்கள் கலந்து விட்டதாக தகவல் வெளியானது.

பெருமளவில் கூட்டம் கூடினால் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற போலீஸார் முயன்றனர். இதையடுத்து மாணவர்களின் போராட்ட களத்தை மாற்றுமாறு மும்பை போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர். ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். முதலில் மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கேட் வேயில் இருந்து கலைந்து செல்ல ஒப்புக் கொண்டனர். போராட்டக்காரர்களை வாகனங்களில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்த கபில் அகர்வால் கூறுகையில் ‘‘போலீஸாரின் நிர்பந்தம் காரணமாக கேட் வேயில் இருந்து நாங்கள் கலைந்து சென்றுள்ளோம். எனினும் ஆசாத் மைதானத்தில் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x