

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர், உற்சவரான மலையப்பர் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முந்தைய நாள் இரவு முதலே காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஏழுமலையான் கோயிலில் வண்ணமிகு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகப்பு கோபுரம், பலிபீடம், கொடிக்கம்பம், கருடன் சன்னதி என கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், கோயிலுக்கு வெளியேயும், தனியாக மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நேற்று சுவாமியை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தரிசனம் செய்தனர். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள், திரைப்படத்துறை பிரபலங்கள் ஆகியோரும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
நேற்று காலை தங்க ரதத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் உற்சவ மூர்த்தி மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டபடி ஏழுமலையானை வழிபட்டனர்.
- என். மகேஷ்குமார்