

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் செவ்வாக்கிழமை பேசிய பிரதமர் மோடி, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைந்து வளர்ந்து வருகிறது, இருநாட்டு நலன்களுக்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது புத்தாண்டு வாழ்த்துக்களை அதிபர் ட்ரம்புக்கும் அவரின் குடும்பத்தாருக்கும், அமெரிக்க மக்களுக்கும் இந்திய மக்கள் சார்பில் தெரிவித்தார். அதற்கு அதிபர் ட்ரம்பும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தெரிவித்தார்.
இரு நாடுகளின் நலன்களுக்காக இணைந்து பணியாற்றவும், கூட்டுறவு வளர்க்க விரும்புவதாக அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வலுவடைந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் இருந்து இரு நாடுகளுக்கு இடையிலான ராஜங்கரீதியான கூட்டுறவு குறிப்பிடத்தகுந்த அளவு ஆழ்ந்த வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளின் உறவில் எட்டப்பட்ட சாதனைகள் குறித்தும் பிரதமர் மோடி மனநிறைவு பெறுவதாகவும், இருநாடுகளின் நட்புறவை, கூட்டுறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது