ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை நடத்த அமித் ஷா உத்தரவு - டெல்லி ஆளுநருடன் ஆலோசனை

தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
Updated on
2 min read

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிகழ்ந்த மோதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, உரிய விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜகவின் ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பாண்டிச்சேரி பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சிவசேனைக் கட்சித் தலைவரும் மகாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

அமித் ஷா உத்தரவு

இந்நிலையில், ஜேஎன்யு வன் முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காலை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜ்வாலையும் சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேஎன்யு மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு ஆளுநரிடம் அவர் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் தேவேந்திர ஆர்யா கூறியதாவது:

ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததும், போலீஸார் உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை அடையாளம் காணும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in