

மக்களவைத் தேர்தலில் அரசியல்வாதிகளில் சிலர் கட்சி மாறி தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பாஜகவில் இணைந்த ஒருசிலரால் மட்டுமே வெற்றிக் கனியைப் பறிக்க முடிந்தது. மற்ற கட்சிகளில் சேர்ந்த பலர் தோல்வியைத் தழுவினர்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவினர்.
உத்தரப் பிரதேசத்தில் 19 அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். பிற கட்சிகளிலிருந்து விலகிய 15 பேர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். அதேபோல காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளில் தலா 7 பேர் இணைந்தனர். அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளத்தில் 3 பேர் இணைந்தனர்.
இதுபோன்று கட்சித்தாவி தேர்தலை சந்தித்த பலர் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இணைந்தவர்கள் தோல்வியடைந்தனர்.
அதே சமயம் பாஜகவில் இணைந்து போட்டியிட்ட பிரிஜ் பூஷன் சரன் சிங், ஜெகதாம்பிகா பால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ராஷ்ட்ரிய லோக் தளத்தில் சேர்ந்த அமர் சிங், ஜெயப்பிரதா ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பிற கட்சிகளிலிருந்து விலகி வந்த 13 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் சந்தோஷ் குமார் பூர்னியா என்பவர் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக சார்பில் (பிற கட்சிகளிருந்து வந்த) 9 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் 4 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எம்.பி. வெங்கட்டராமி ரெட்டியும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.