காவலாளிகளுக்கும் தாக்குதல் கும்பலுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது : ஜே.என்.யு  மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் குற்றச்சாட்டு

காவலாளிகளுக்கும் தாக்குதல் கும்பலுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது : ஜே.என்.யு  மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவலாளிகள் தடுக்கவில்லை ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை, ஆசிரியர்களைப் பயங்கரமாக தாக்கியது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து, சபர்மதி விடுதியில் போராடத் தயாராக இருந்த மாணவர்கள் மீது முகமூடி அணிந்து வந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் ஆகும். கண்மூடித்தனமான இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல் ஆகியவற்றை பயன்படுத்தி அங்கிருந்த மாணவர்ளை கடுமையாக தாக்கினர். வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை.

தாக்குதலின் போது பெயரைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர். காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in