

அலியா பட், அனில் கபூர், ராஜ்குமார் ராவ், ட்விங்கிள் கண்ணா, அனுராக் காஷ்யப், சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பிரபலங்கள் ஜே.என்.யுவில் நடந்த வன்முறைக் குறித்து கடும் எதிர்ப்புக் குரல்களை தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஞாயிறன்று முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பல்கலை வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், ஆசிரியர்களை ஆயுதங்களினால் தாக்க 35 பேர் காயமடைந்தனர், மேலும் ஹாஸ்டல், பிற சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியலைகளை எழுப்ப, ஆங்காங்கே கடும் எதிர்ப்புக் குரல்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன
இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் உட்பட திரைத்துறையினர் கடும் கண்டனக்குரல்களை தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அனில் கபூர் தனது மலங் ட்ரெய்லர் அறிமுக விழாவின் போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இதனை கண்டிக்க வேண்டும். இது மிகவும் துயரமானது. அதிர்ச்சிகரமானது, பார்த்தவுடன் நான் தொந்தரவடைந்தேன். என்னால் இரவு முழுதும் தூங்க முடியவில்லை. என்ன நடந்தது என்பது கண் முன்னே வந்து செல்கிறது. வன்முறையினால் எந்த ஒன்றும் தீராது. யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
நடிகர் ஆதித்ய ராய் கபூர், “நம் நாட்டில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமேயில்லை. இதனை நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவதுதான் முறை” என்றார்
அலியா பட், “நம் நாட்டில் பிரிவினையைத் தூண்டும், அடக்கியாளும், வன்முறையை ஆதரிக்கும் எந்த ஒரு கருத்தியலையும் எதிர்க்க வேண்டும். மாணவர்கல், ஆசிரியர்கள் அமைதியான மக்கள் ஆகியோர் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக தொடர்ந்து நேரிட்டிருப்பது, அனைத்தும் நன்றாக உள்ளது என்ற பாசாங்கை நிறுத்த அழைப்பு விடுப்பதாகும்.
நாம் உண்மையை அதன் கண்ணில் சந்திக்க வேண்டும், நம் நாடு தனக்குத்தானே போர் செய்து கொள்கிறது. நம் கருத்தியல்கள் வேறு வேறாக இருக்கலாம், நம் சிக்கலான தீர்வுகளுக்கு மனிதார்த்த தீர்வுகளையே கண்டுபிடிக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய லட்சியங்களையே வளர்த்தெடுக்க வேண்டு, அதில்தான் இந்தநாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. ” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சோனம் கபூர் தன் பக்கத்தில், “அதிர்ச்சிகரமாகவும் அவமானமாகவும் உள்ளது, கோழைத்தனத்தின் உச்சம், ஏன் முகமூடி அணிய வேண்டும், அப்பாவிகளைத் தாக்குவதற்கு எதற்கப்பா முகமூடி?” என்று சாடியுள்ளார்.
இயக்குநர் ஸோயா அக்தர் தன் வலைத்தளப் பக்கத்தில், “இன்னும் வேலிக்குள் இருக்கிறீர்களா? அரசியலை மறுக்கிறீர்களா? இன்னும் தகவல் தேவைப்படுகிறதா? ஆம் என்றால் நீங்கள் கோழை மற்றும் ஊமையாக இருக்க வேண்டும். நான் சுதந்திராவாதி, ஆகவெ நாம் தேர்வு செய்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஜே.என்.யு. வளாகத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய வீடியோக்களை வெளியிட்டுள்ள அனுராக் காஷ்யப், “இந்துத்துவ பயங்கரவாதத்தை ஆங்கு காண முடிகிறது” என்றார்.
ட்விங்கிள் கன்னா, “இந்தியாவில் பசுக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது, மாணவர்களுக்கு இல்லை. இந்த நாட்டை இனியும் அடக்கியாள முடியாது. வன்முறை மூலம் மக்களை உங்களால் அடக்கியாள முடியாது. இன்னும் போராட்டங்கள், ஸ்ட்ரைக்குகள் நடக்கவே செய்யும் இன்னும் அதிகம் பேர் தெருக்களில் இறங்கி போராடுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் ஸ்வரா பாஸ்கர், ஷப்னா ஆஸ்மி, ரிச்சா சதா, மொகமத் ஜீஷன், அயுய்ப், தாப்ஸி, எழுத்தாளர் கவுரவ் சோலங்கி, அபர்னா சென், விஷால் பரத்வாஜ், அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா, ரீமா காக்டி, அனுபவ் சின்ஹா ஆகியோரும் ஜே.என்.யு தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.