ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம்: பாஜக - காங்கிரஸ் கடும் மோதல்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம்: பாஜக - காங்கிரஸ் கடும் மோதல்
Updated on
2 min read

ராகுல் மீது சுஷ்மா தாக்கு; சோனியா காந்தி ஆவேசம்

*

லலித் மோடி விவகாரத்தில் மக்க ளவையில் நேற்று பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கருப்புப் பண விவகாரம் தொடர் பாக பாஜக எம்.பி. ஒருவர் தன் மீது குற்றம்சாட்டை வைத்ததால் ஆவேச மடைந்த சோனியா, வழக்கத்துக்கு மாறாக அவைக்கு நடுவே வந்து அமளியில் ஈடுபட்டார். லலித் மோடி விவகாரத்தில் தன்மீது குற்றம்சாட் டிய ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், குவாட் ரோச்சி, ஆண்டர்சன் விவகாரங் களை முன்வைத்து சுஷ்மா ஸ்வராஜ் ஆக்ரோஷமாக பேசினார். இதனால், மக்களவையில் நேற்று சூடுபறந்தது.

லலித் மோடி விவகாரத்தில், ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸை நேற்று மக்களவையில் கேள்விகளால் துளைத்தெடுத்தார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். குவாட்ரோச்சியை தப்பவிடுவதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றும், போபால் விஷவாயுக் கசிவு குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை உங்கள் தந்தை ஏன் தப்ப விட்டார் என்பதையும் உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என ராகுல் காந்தியை நோக்கி ஆவேசமாக கேட்டார் அவர்.

லலித் மோடியிடம் இருந்து, சுஷ்மா ஸ்வராஜ் பணம் பெற்றதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். லலித் மோடி விவகாரத்தை அவையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது: போபர்ஸ் ஊழல் குற்றவாளியான ஒட்டாவியோ குவாட்ரோச்சியிடமிருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பதையும், 15,000 பேர் இறப்பதற்குக் காரணமான போபால் விஷவாயு சம்பவ குற்றவாளி ஆண்டர்சனை உங்கள் தந்தை ராஜீவ் காந்தி ஏன் தப்பவிட்டார் என்பதையும் உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ராகுல்.

இங்கிலாந்திலிருந்து லலித் மோடியைக் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் அரசு நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. அவரை நாடுகடத்த எதுவும் செய்யவில்லை. செயல்படாமல் இருந்தீர்கள். இங்கிலாந்தில் தங்குவதற்கு லலித் எப்படி அனுமதி வாங்கினார் என என்னைக் கேட்கிறீர்கள். அந்த அனுமதியை உங்களின் ஆட்சிக் காலத்தில்தான் அவர் வாங்கினார். என்னவெல்லாம் நடந்ததோ அது உங்களின் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது.

லலித் மோடிக்காக வாதாடும் வழக்கறிஞர் குழுவில் எனது மகள் 9-வது நிலையில் இளநிலை வழக்கறிஞராகவே உள்ளார். அதற்காக ஒற்றை ரூபாயைக் கூட அவர் வாங்கவில்லை. இளநிலை வழக்கறிஞருக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். அந்த வழக்கில், தனது மூத்த வழக்கறிஞர்களுடன்தான் என் மகள் ஆஜராகிறார்.

லலித் மோடியை நாடுகடத்தும் விவகாரத்தில் காங்கிரஸே இரண்டாக பிரிந்திருந்தது. தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விரும்பினார். லலித் மோடியை நாடுகடத்த இங்கிலாந்து நிதியமைச்சருக்கு கடிதம் எழுதிய சிதம்பரம், அதற்காக அழுத்தம் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

சுஷ்மா பேசியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், சோனியா ஹெட்போன் மூலம் அவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

லலித் மோடி விவகாரம் தொடர் பான விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.பி. பி.வேணு கோபால் இவ்விவகாரத்தில் அரசு லலித் மோடிக்கு எவ்வித சலுகை யும் காட்டக்கூடாது என்றார். திரிணமூல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி, பிஜு ஜனதா தளம் பார்த்ருஹரி மஹ்தாப் உள்ளிட்டோரும் பேசினர்.

அவையின் மையப் பகுதிக்கு வந்த சோனியா காந்தி

கருப்புப் பணம் தொடர்பாக சோனியாவைக் குறிப்பிட்டு பாஜக எம்.பி. ஒருவர் குற்றம்சாட்டினார். இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார். இதைத்தொடர்ந்த நடந்த அமளியால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லலித் மோடி விவகாரம் குறித்து பேசினார். அப்போது பாஜக எம்.பி. ஒருவர் சோனியாவை கருப்புப் பணத்துடன் தொடர்புபடுத்தி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அக்கருத்தால் கோபமடைந்த சோனியா காந்தி, அவர் என்ன சொன்னார்? என ஆவேச மாகக் கேள்வியெழுப்பினார். மேலும் வழக்கத் துக்கு மாறாக அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டார். பிற காங்கிரஸ் எம்.பி.க்களும் அவரைத் தொடர்ந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையை அவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனின் கவனத்துக்கும் கொண்டு வந்தார்.

அப்போது, அவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், பாஜக உறுப்பினர் கூறியது என்னவென்று எனக்குத் தெரியாது. அவையில் இடம்பெறக் கூடாத வார்த்தையை அவர் கூறியிருந்தால் அது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கார்கே தெரிவித்தார். அமளி தொடர்ந்ததால், அவை பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “யாரும் எந்த உறுப்பினருக்கு எதிராகவும் குறிப்பாக முக்கிய தலைவர்கள் அது காங்கிரஸ் தலைவரோ அல்லது பிரதமரோ அல்லது பாஜக தலைவரோ அவர்கள் மீது குற்றம்சாட்டக்கூடாது. எந்தவொரு காரணத்தினாலும் சோனியாவுக்கு எதிரான குற்றச்சாட்டு அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in