Published : 06 Jan 2020 01:22 PM
Last Updated : 06 Jan 2020 01:22 PM

நிதி பற்றாக்குறையால் சரிவை சந்திக்கும் கிராம தத்தெடுப்பு திட்டம்

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘சன்ஸத் ஆதர்ஷ் கிராம யோஜனா’ (முன்மாதிரி கிராம தத்தெடுக்கும் திட்டம்) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை ஊரக வளர்ச்சித் துறை அமல்படுத்துகிறது.

இதன்படி நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆண்டுக்கு தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி, முன்மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டும். மக்களவை எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட கிராமத்தையும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தையும் தத்தெடுக்கலாம். இதன்மூலம், முன்மாதிரி கிராமங்களைச் சுற்றியுள்ள கிராமங்களும் முன்னேறும் என மோடி கருதினார்.

எனினும் இந்த திட்டம் தொடக்கம் முதலே சரிவை சந்திக்கத் தொடங்கின. நாடாளுமன்ற இரு அவைகளின் சுமார் 800 எம்பி-க்களும் தனது பதவிக்காலம் முடிவதற்குள் தலா 5 கிராமங்களை தத்தெடுக்கும் வகையில் 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டன. முதல் கட்டமாக, 88 சதவீத எம்பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்தனர். 2-வது கட்டமாக 50 சதவீதமாக (281 மக்களவை, 91 மாநிலங்களவை எம்பிக்கள்) குறைந்தது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு கிராமத்தைக்கூட தத்தெடுக்காத எம்.பி.க்கள் பலரும் இருந்தனர். நிதி பற்றாக்குறை காரணமாகவே எம்.பி.க்கள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. இதுவே பற்றாக்குறை இருக்கும்போது, இந்த நிதியைக் கொண்டே கிராம தத்தெடுப்பு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சாத்தியமில்லை.

இந்த நிலையை அறிந்த ஊரக வளர்ச்சித் துறை இந்த திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்க முயன்றது. ஆனால், இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றனர். பிரதமர் மோடியின் 2-வது ஆட்சியிலும் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் சரிவு தொடர்கிறது. புதிய அரசு அமைந்து 6 மாதங்களாகியும் ஒரு எம்.பி. கூட கிராமத்தை தத்தெடுக்கவில்லை. மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் 4 கட்டங்களில் தத்தெடுக்த எம்.பி.க்கள் முறையே 703, 497, 301 மற்றும் 252 எனக் குறைந்து வந்துள்ளன. இவர்கள் தத்தெடுத்த மொத்த கிராமங்கள் எண்ணிக்கை 1,753 மட்டுமே.

மோடி தத்தெடுத்த கிராமங்கள்

பிரதமர் மோடி மட்டுமே தனது வாரணாசி தொகுதியில் ஜெயாபூர், நாகேபூர், ககரியா மற்றும் டொமரி ஆகிய 4 கிராமங்களை தத்தெடுத்திருந்தார். இவற்றில் அறிவித்த திட்டங்களை முன்கூட்டியே நிறைவேற்றினார். அவர் தத்தெடுப்பதாக அறிவித்தவுடன் நாட்டின் பல தனியார் பெரு நிறுவனங்கள் அக்கிராமங்களில் தாமாக முன்வந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்கியதே இதற்குக் காரணம். இதற்காக, தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பிரதமர் தனியாக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

- ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x