Published : 06 Jan 2020 01:17 PM
Last Updated : 06 Jan 2020 01:17 PM

மகாராஷ்டிர அமைச்சர்கள் இலாகா விவரம் வெளியீடு: அஜித் பவாருக்கு நிதித் துறை ஒதுக்கீடு, ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா

மகாராஷ்டிர அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித் துறையும், ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுலா துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கடந்த நவம்பர் 28-ல் பதவியேற்றது. முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அவருடன் 6 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். டிசம்பர் 30-ம் தேதி மேலும் 36 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை முதல்வர் உத்தவ் தாக்கரே ஆளுநருக்கு நேற்று முன்தினம் அனுப்பி இருந்தார். இதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன்படி, பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே தன்வசம் வைத்துக் கொண்டார். துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை, ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக்குக்கு உள் துறையும் முதல்வரின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலாசாஹிப் தோரட்டுக்கு வருவாய் துறை, முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு பொதுப் பணித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தனஞ்செய் முண்டேவுக்கு சமூக நீதித் துறையும், மற்றொரு தலைவர் ஜிதேந்திர அவாதுக்கு வீட்டுவசதித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் முக்கிய துறைகளைப் பெற்றுள்ளது.

இதுபோல சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும் சுபாஷ் தேசாய்க்கு தொழில் மற்றும் சுரங்கத் துறையும் அனில் பரபுக்கு போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x