Last Updated : 06 Jan, 2020 10:22 AM

 

Published : 06 Jan 2020 10:22 AM
Last Updated : 06 Jan 2020 10:22 AM

முஸ்லிம் பண்டிகைகள் குறித்து என்பிஆர் கையேட்டில் இடம்பெறாதது ஏன்? - மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி

முஸ்லிம் பண்டிகைகள் விவரம் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கையேட்டில் இடம் பெறாதது ஏன் என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கையேட்டில் இடம் பெற்றுள்ள இந்தியப் பண்டிகைகளின் பட்டியலில் இருந்து ரம்ஜான் உள்ளிட்ட முஸ்லிம் பண்டிகைகள் கைவிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்டவை புகார் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்சிஆர்) தயார் செய்யும் முனைப்பில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அடுத்தகட்டமாக தேசிய மக்கள்தொகை பதிவேடும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கையேட்டில், ‘‘ஆங்கிலம் / கிரிகோரியன் காலண்டருடன் (நாள்காட்டி) தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள்" என்ற இணைப்பு உள்ளது. அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்தியப் பண்டிகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குரு கோபிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்த பூர்ணிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான்,மிலாடி நகபி, மொஹர்ரம் உள்ளிட்டவை இடம் பெறவில்லை. எனவே திட்டமிட்டே முஸ்லிம் பண்டிகைகளை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது என்று முஸ்லிம் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. இதை சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால்
இது வழக்கமான நடைமுறை தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

முஸ்லிம் பண்டிகை அனைத்தும் இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அதற்கான மாதம், தேதிகள் வெளியிடப்படுகின்றன. இதற்கு நிகரான மாதத்தை கிரிகோரியன் காலண்டருடன் ஒப்பிட்டால் ஆண்டுதோறும் மாதம் மாறுவது தெரியவருகிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது 3 வாரங்களுக்கு முன்னதாகவே இஸ்லாமிய பண்டிகைகள் வந்துவிடும். அதாவது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒரு மாதம் முன்பாகவே இஸ்லாமிய பண்டிகை வந்துவிடும்.எனவே அதற்கான தேதியையோ, மாதத்தையோ முன்னதாகவே கணித்து குறிப்பிட்டு கையேட்டில் வெளியிட முடியாத நிலை உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, கிரிகோரியன் காலண்டர் அல்லது இந்து காலண்டரில் முஸ்லிம் பண்டிகைகள் குறித்து தேதியோ, மாதமோ வெளியிட முடியாத நிலை உள்ளதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்து காலண்டரும், கிரிகோரியன் காலண்டரும் வெவ்வேறானவைதான் என்றாலும், இந்து பண்டிகைகளின் மாதம் மாறினாலும் அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு மேல் தாண்டாது. எடுத்துக்காட்டாக துர்கா பூஜையானது செப்டம்பர் அல்லது அக்டோபரில்
தான் வரும். மற்ற மாதங்களில் இது வருவதில்லை. ஆனால் முஸ்லிம் பண்டிகைகளை எடுத்துக்கொண்டால் நிலைமை வேறாக உள்ளது.

எனவேதான் முஸ்லிம்கள் பண்டிகை குறித்து என்பிஆர் கையேட்டில் வெளியிடப்படவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x