Last Updated : 05 Jan, 2020 03:04 PM

 

Published : 05 Jan 2020 03:04 PM
Last Updated : 05 Jan 2020 03:04 PM

சிஏஏ விவகாரத்தில் ராகுல், பிரியங்கா மக்களை தவறாக வழிநடத்தி கலவரத்தை தூண்டுகிறார்கள்: அமித் ஷா குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

டெல்லியில் பாஜக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி, கலவரத்தை தூண்டுகின்றனர்.

உங்கள் குடியுரிமை பறிக்கப்படும் என்று தேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களிடம் ராகுலும், பிரியங்காவும் தவறான தகவலைப் பரப்பி தூண்டிவிடுகிறார்கள். குடியுரிமைத் திருத்தச்சட்டத்தால் ஒருபோதும் நீங்கள் குடியுரிமையை இழக்கமாட்டீர்கள், அதுபோன்ற எந்தவிதமான விதிகளும் அதில் இல்லை என்பதை நான் சிறுபான்மை மக்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
அரவிந்த் கேஜ்ரிவால், சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோர் கண்களைத் திறந்து பாருங்கள். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான நான்கானா சாஹிப் கடந்த இரு நாட்களுக்கு முன் எவ்வாறு தாக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்துவருபவர்களுக்கு அங்கு நடந்த சம்பவமே பதிலாகும். பாகிஸ்தானில் தாக்குதலுக்கு ஆளாகும் சீக்கியர்கள் எங்கு செல்வார்கள்.

பாஜக அறிமுகம் செய்த இலவச தொலைப்பேசி எண், குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் எண் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள், இன்னும் சிலரோ அது நெட்பிலிக்ஸ் எனப்படும் சேனலின் எண் என்றும் பரப்பிவிட்டார்கள். அது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் எண் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். அந்த எண், பாஜகவின் இலவச தொலைப்பேசி எண்ணாகும்.


டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 15 லட்சம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இப்போதுவரை அந்த கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை நிரந்தரமாக்குவதாகத் தெரிவித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதுபோன்ற பல வாக்குறுதிகளை கேஜ்ரிவால் நிறைவேற்றவில்லை.

டெல்லி மாநிலத்துக்கு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், அதைத் தடுப்பதிலேயே கேஜ்ரிவால் இருந்து வருகிறார். இதை டெல்லி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் ஆளும் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் குறித்த அறிக்கையை வாக்களிக்கும் மக்கள் கேட்க வேண்டும் என்று கோருகிறேன்.

டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x