

மலையாள நடிகையை கடத்தி மானபங்கம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இருந்து நடிகர் திலீப்பை விடுவிக்க முடியாது என்று கேரள விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த நடிகை ஒருவரை காரில் கடத்தி, மானபங்கம் செய்ததாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
இந்த வழக்கு எர்ணாகுளத்திலுள்ள கூடுதல் சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நடிகர் திலீப் சார்பில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.சுரேஷன் வாதிட்டார். அவர் கூறும்போது, “இந்த வழக்கில் திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
எனவே அவரை இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இருந்து விடுவிக்கக் கூடாது” என்றார். இதையடுத்து திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கவேண்டும் என்று திலீப் கோரியிருந்தார். அந்த கோரிக்கை யையும் ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தொடர்ந்து வரும் 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடிகர் திலீப் ஆஜராக வேண்டும் என்றும், அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- பிடிஐ