

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் முஸ்லிம்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாநகராட்சியில் பிறப்பு சான்று, இறப்பு சான்று கோரி ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிறப்பு சான்று கோரி நாளொன்றுக்கு சில விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்படும்.
இப்போது 150 விண்ணப்பங்கள் வரை குவிகின்றன” என்று தெரிவித்தார். ஆக்ராவில் உள்ள எஸ்.என். மருத்துவமனை நிர்வாகி அகர்வால் கூறும்போது, “ஏற்கெனவே வழங்கப்பட்ட பிறப்பு சான்று, இறப்பு சான்றுகளில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் கோரி ஏராளமானோர் எங்கள் மருத்துவமனையில் மனு அளிக்கின்றனர்.
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் முறையான சான்றுகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி மட்டுமே நடைபெறும். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல் செய்யப்படாது என்று மத்திய அரசு பலமுறை விளக்கம் அளித்துள்ளது. எனினும் முஸ்லிம்களிடையே எழுந்துள்ள அச்சம் விலகவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.