

பிஹார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்த பணிகள் மே 15-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடக்கும் என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி திட்டவட்டமாக அறிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். என்பிஆரும், என்ஆர்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய ஜனதாதளம் எம்.பிக்கள் ஆதரவு அளித்தநிலையில் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தமாட்டோம் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிஹாரின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி என்பிஆர் பணிகள் மே 15-ம்தேதி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்னாவில் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
2020-ம் ஆண்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிவரை நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிஹார் மாநிலத்தில் மே 15-ம் தேதி தொடங்கி, மே 28-ம்த தேதி வரை என்பிஆர் பணிகள் நடக்கும்.
கடந்த 2010-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஏப்ரல் முதல் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை என்பிஆர் பணிகள் நடந்தன. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக என்பிஆர் பணிகள் நடக்கின்றன. என்ஆர்சிக்கும் என்பிஆருக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. இரண்டும் தனித்தனி.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்பிஆர் பணிகளையும் அமல்படுத்தமாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார்கள். ஆனால், நான் சொல்கிறேன், எந்த மாநிலஅரசும் என்பிஆர் செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் துணிச்சலும் இல்லை.
அதுமட்டுமல்லாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளைச் செய்ய மறுக்கும் அரசு அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. அதுமட்டுமல்லாமல் என்பிஆர் பணிகளை செய்ய மறுத்தாலும் ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும்.
என்பிஆருக்கும், என்ஆர்சிக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. என்ஆர்சி நாடுமுழுவதும் அமலாகாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்துள்ளார். அவரின் வார்த்தைதான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது.
இவ்வாறு சுஷில்குமார் மோடி தெரிவித்தார்