

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில், வங்கதேசத்தை சேர்ந்த குற்றவாளிகள் இருப்பது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அண்மையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, டெல்லி, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் எஸ்ஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தயாராக பெட்ரோல் குண்டுகள் இதுகுறித்து எஸ்ஐடி வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது, போலீஸார் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் தயாராக கொண்டு வந்திருந்தனர். இதுவே அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்தது. தற்போதைய விசாரணையில், அந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருந்த 15 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அவர்கள் ஏற்கனவே பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர். அதேபோல், வன்முறையில் ஈடுபட்ட மற்ற வங்க தேசத்தினரையும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.