கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஊர்வலம் சென்ற பாஜகவினர் மீது தடியடி: தடையை மீறியதால் போலீஸார் நடவடிக்கை
கர்நாடகாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற பாஜகவினர்மீது போலீஸார் தடியடி நடத்தியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, பெலகாவி, குல்பர்கா உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோலாரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாரதிய நாகரீக ரக் ஷன வேதிகே அமைப்பின் சார்பில் சனிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.
பாஜகவினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை கோலார் பாஜக எம்.பி. முனுசாமி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி சாலையில் தொடங்கி மணிக்கூண்டு வரை சென்ற இந்த ஊர்வலத்தின் இறுதியில் பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் பொதுக்கூட்டமும் நடைபெறு
வதாக இருந்தது.
இந்நிலையில் போலீஸ் அனுமதியை மீறி போராட்டக்காரர்கள் எஸ்.என்.ஆர். சதுக்கத்தில் நுழைய முயன்றனர்.
அங்கு இஸ்லாமியர்அதிகம் வசிப்பதால், ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீஸாரின் தடையை மீறி, பாஜகவினர் ஊர்வலம் செல்ல முயன்றதால் தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த சம்பவத்தால் கோலாரில் எம்.ஜி. சாலை, எஸ்.என்.ஆர். சதுக்கம், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்து, லாரி, ஆட்டோ போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட தால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. கோலாரில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
