

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான சமீபத்திய ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்ட வன்முறையின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளாத குடும்பங்களைச் சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முசாஃபர் நகருககு வந்தார்.
பிரியங்கா காந்தி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க இம்முறை அவர் அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டார்.
கடந்த வாரம் லக்னோவுக்குச் சென்று, போராட்டங்களின் போது காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், தன் கழுத்தைப் பிடித்துத் திருகியதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். ஆனால், இதனை போலீஸார் மறுத்தனர்.
அவர் பிஜ்னூருக்குச் சென்று அங்கு நடந்த வன்முறை மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். ஆனால் அவர் மீரட் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முசாஃபர் நகருக்கு அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டார். அங்கு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பரவலான போராட்டங்களின்போது வன்முறையில் காயமடைந்தவர்களில் சிலரின் இல்லங்களுக்குச் சென்றார்.
போராட்டத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்தபோது, "இந்த துன்பத்தில் நான் உங்களுடன் நிற்பேன்" என்று கூறினார்.
பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், ''மக்கள் இரக்கமின்றித் தாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறார்களைக் கூட யாரும் காப்பாற்றவில்லை. ஏழு மாத கர்ப்பமாக இருந்த 22 வயதுப் பெண்ணும் தாக்கப்பட்டார்'' என்றார்.