Last Updated : 04 Jan, 2020 02:27 PM

 

Published : 04 Jan 2020 02:27 PM
Last Updated : 04 Jan 2020 02:27 PM

மத்திய தொழிலாளர் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: ஜனவரி 8-ல் தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தம்  

மத்திய தொழிலாளர் துறை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்குவாருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவித்தபடி தேசிய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஜனவரி 8-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொழிலாளர் சீர்கேடு மற்றும் பொதுத்துறை தனியார் மயமாக்கலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அரசிற்கு உணர்த்தும் வகையில் தேசிய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பாஜகவின் கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியோர் வேலை நிறுத்தம் அறிவித்தன.

இதில், பாரதிய மஸ்தூர் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்தது. மற்ற சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி நாடு முழுவதிலும் வேலைநிறுத்தம் செய்ய உள்ளன.

இதனால், 12 தேசிய சங்கங்களின் நிர்வாகிகளை நேரில் அழைத்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பலன் எதுவும் கிடைக்காமல் அரசுக்குத் தோல்வி கிடைத்துள்ளது.

பேச்சுவார்த்தை எனும் பெயரில் அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஏற்கெனவே தனக்கு எழுதி அளிக்கப்பட்ட அறிக்கையை படித்ததாகப் புகார் எழுந்தது. அதில், தொழிலாளர் நலன் கருதி அரசு இந்த முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறியது சங்க நிர்வாகிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது,

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் சிஐடியூவின் பொதுச்செயலாளரான தபன் சென் கூறும்போது, ''பேச்சுவார்த்தையில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டாமல் அதை ஒரு சடங்காக செய்தது. எங்களுடன் பேசவே மத்திய அமைச்சர் ஆர்வம் காட்டாமையால் நாம் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டோம்'' எனத் தெரிவித்தார்.

தேசிய தொழிலாளர் சங்கங்கள் மத்திய அரசிடம் இந்த முறை பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில், தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் நீங்க வேண்டும் எனவும், சர்வதேச அளவிலான சமூகப் பாதுகாப்பை பணிகளில் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21,000 நிர்ணயிக்கவும் கோரப்பட்டது. தொழிலாளர்களின் ஓய்வு ஊதியத்திகை ரூ.10,000க்குக் குறைவாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல், வருடாந்தர வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சமாக உயர்த்தவும் சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது. இடதுசாரி சங்கங்கள் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி மற்றும் என்பிஆர் பதிவேடுகளும் ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டன.

நாடு முழுவதிலுமான இப்போராட்டத்தை, காங்கிரஸின் ஐஎன்டியுசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிஐடியூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியூசி உள்ளிட்ட முக்கிய 12 சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த சங்கங்கள் நடத்தும் போராட்டத்திற்கு இடதுசாரி சார்பு விவசாயிகளின் சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x