Last Updated : 04 Jan, 2020 12:41 PM

 

Published : 04 Jan 2020 12:41 PM
Last Updated : 04 Jan 2020 12:41 PM

'கடவுள் ஒருவர்தான்; வெறுப்பைப் பரப்பாதீர்' - குருதுவாரா தாக்குதலுக்கு ஹர்பஜன் சிங் கண்டனம்: பாக். பிரதமருக்கு வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் : கோப்புப்படம்

புதுடெல்லி,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவில் நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாரா உள்ளது. இது சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ் பிறந்த இடமாகும். சீக்கியர்களின் புனித ஸ்தலமாக இது மதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீக்கியப் பெண் ஜகித் என்பவரை முகமது ஹசன் என்பவர் அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன், அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து அறிந்த முகமது ஹசன் மற்றும் அவரின் சகோதரர் முகமது இம்ரான் ஆகியோர் நேற்று மாலை குருதுவாரா பகுதிக்கு வந்து சீக்கிய யாத்ரீகர்கள் மீது கல்வீசித் தாக்கினர்.

மேலும், சீக்கிய குருதுவாராவை அடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசனும், முகமது இம்ரானும் அங்கிருந்தவர்களை மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " சிலரால் அமைதியாகவே வாழ முடியாதா? அவர்களுக்கு என்ன ஆயிற்று என எனக்குத் தெரியவில்லை. முகமது ஹசன், ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவேன் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார். இதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

கடவுள் ஒருவர்தான். அவரைப் பிரிக்காதீர். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பைப் பரப்பாதீர். முதலில் மனிதர்களாக வாழ்வோம், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்போம். குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவோம் என்று முகமது ஹசன் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருப்பது குறித்து பிரதமர் இம்ரான் கான் கவனிக்க வேண்டும். அங்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

நான்கானா சாஹேப் நகரில் நேற்று சீக்கியர்கள் மீதுதாக்குதல் நடத்திய கும்பல் : படம் உதவி ட்விட்டர்

இதற்கிடையே குருதுவாராவில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கண்டித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நான்கானா சாஹிப் குருதுவாராவில் சீக்கிய சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வன்முறை நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்கானா சாஹிப் நகரில் சீக்கியப் பெண் ஜகித் கவுரைக் கடத்திய ஒரு கும்பல் அவரை மதமாற்றம் செய்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவத்தால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

புனிதமான இந்த இடத்தில் தாக்குதல் சம்பவங்களையும், குருதுவாராவை இடித்துவிடுவேன் என்ற மிரட்டலையும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு உடனடியாகத் தலையிட்டு சீக்கிய சமூகத்தின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருதுவாரா மீதும், சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x