

மேற்கு வங்கத்தில் 34 வயது பெண் அவரது 5 வயது மகளை கொலை செய்து, இரு சூட்கேஸ்களில் அடைத்து கங்கை நதியில் வீசியதாக வங்கி மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமரேஷ் சர்க்கார் என்ற 45 வயது நபர் நேற்று முன்தினம் கொல்கத்தா புறநகர் பகுதியில் கங்கை ஆற்றில் படகில் செல்லும்போது, தன்னிடம் இருந்த 2 பெரிய சூட்கேஸ்களை கங்கையில் வீசினார். அவருடன் பயணம் செய்தவர்கள் சந்தேகம் அடைந்து அவரை போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சூட்கேஸ்களில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் இருப்பதாக சமரேஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கங்கை நதியில் இருந்து ஒரு சூட்கேஸை மீட்ட போலீஸார், சமரேஷ் சர்க்கார் மீது கொலை மற்றும் தடயங்களை மறைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் கூறும்போது, “சமரேஷ் சர்க்கார் துர்காபூரில் வங்கி மேலாளராக பணியாற்றுகிறார். அவரது மனைவியும் குழந்தைகளும் வெளியூரில் உள்ளனர். துர்காபூரில், கணவரை விட்டுப் பிரிந்து 5 வயது மகளுடன் வாழும் ஒரு பெண்ணுடன் சமரேஷ் கள்ள உறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் அவரையும் அவரது மகளையும் கொன்று, உடல்களை வெட்டி சூட்கேஸ்களில் அடைத்துள்ளார். பிறகு கங்கை நதியில் வீசும்போது பிடிபட்டார்” என்றனர்.
சமரேஷை நேற்று முன்தினம் இரவு துர்காபூர் நகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது வீட்டின் முன் திரண்டிருந்த மக்கள், சமரேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் அவரை தண்டிப்பதாகவும் தகராறு செய்தனர்.
சமரேஷை நேற்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றனர்.
இதனிடையே கங்கையில் வீசப்பட்ட மற்றொரு சூட்கேஸ் இன்னும் மீட்கப்படவில்லை. இதை மீட்கும் முயற்சி தொடர்கிறது.