Last Updated : 04 Jan, 2020 11:50 AM

 

Published : 04 Jan 2020 11:50 AM
Last Updated : 04 Jan 2020 11:50 AM

73 இடங்கள் காலியாகின்றன; மாநிலங்களவையில் இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு: தமிழகத்தில் எத்தனை?

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

மாநிலங்களவையில் இந்த ஆண்டு 69 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். ஏற்கெனவே 4 இடங்கள் காலியாக இருப்பதையொட்டி மொத்தம் 73 இடங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் தேர்தல் நடக்கிறது.

இதில் ஓய்வு பெறும் 69 உறுப்பினர்களில் 18 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 17 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

மாநிலங்களவையின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கிடைத்த தகவலின்படி, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜகவுக்குச் சென்றது ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் கணிசமாக உயர்ந்து, பெரும்பான்மையை நோக்கி நகரும் எனத் தெரிகிறது.

அதேசமயம், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியின் அடிப்படையில் மாநிலங்களவையில் சிறிதளவு பலம் அந்தக் கட்சிக்கு உயரக்கூடும்.

இந்த ஆண்டு மத்திய அமைச்சர்களாக இருக்கும் ஹர்திப் சிங் பூரி, ராம்தாஸ் அத்வாலே ஆகியோரும், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், விஜய் கோயல், திக்விஜய் சிங் ஆகியோரும் ஓய்வு பெறுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு 10 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்களே மீண்டும் வருவதற்கு அதிகமான வாய்ப்பு உண்டு. அதேபோல, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காலியாகும் இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவுக்கு இடங்கள் கிடைக்கக் கூடும்.

இந்த ஆண்டு அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்.பி.க்கள் ஓய்வு பெறுகின்றனர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 7 இடங்களும், தமிழகத்தில் 6 இடங்களும், மேற்கு வங்கம், பிஹாரில் தலா 5 இடங்களும் காலியாகின்றன.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள் காலியாகின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலா 3 இடங்களும், தெலங்கானா, சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலா 2 எம்.பிக்களும் ஓய்வு பெறுகின்றனர்.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு எம்.பி. ஓய்வு பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x