Published : 04 Jan 2020 06:35 AM
Last Updated : 04 Jan 2020 06:35 AM

மதுப் பழக்கத்தால் கலாபவன் மணி மரணம்: அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

திருவனந்தபுரம்

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகிலுள்ள குன்னி சேரியை பூர்வீகமாகக் கொண்டவர் ராமன்மணி. சிறுவயதில் இருந்தே நடிப்பு, இசை, மிமிக்ரி ஆகியவற் றில் அவருக்கு கொள்ளைப் ப்ரியம். ஆனால், கருப்பான உருவத் தோற்றமும், சாதிய அடிப்படையி லான பாகுபாடும் அவரது மேடைக் கனவை சிதைத்தது. அதையெல் லாம் உடைத்து, ‘கலாபவன்’ (கூத்துப்பட்டறை அமைப்பு) அவ ருக்கான வாசலைத் திறந்துவைக்க, தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் கலாபவன் மணியாக அவர் கோலோச்சினார்.

ஆனால், ஒரே இரவில் அந்த வளர்ச்சி கைகூடிவிடவில்லை. இதில் கலாபவன் மணி கடந்து வந்த வலிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘சாலாக்குடிகாரன் சங் காதி’ என மலையாளத்தில் கடந்த ஆண்டு திரைப்படமே வெளி யானது.

ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்வைத் தொடங்கிய கலாபவன் மணி, 1995-ல் வெளியான அக்ஷரம் என்னும் மலையாளப் படத்தில் ஆட்டோ ஓட்டுனராகவே அறிமுகம் ஆனார். மலையாளத்தில் நாயக னாக பல படங்களில் நடித்திருந் தாலும், குணச்சித்திர பாத்திரத்தில் தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை செய்திருக்கிறார். ‘ஜெமினி' திரைப்படத்தில் விக்ரமிற்கு வில்ல னாக ‘தேஜா’ என்ற பாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

‘வசந்தியும் லெட்சுமியும் பின்னே நானும்’ திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்தார் கலா பவன் மணி. இதுதான் தமிழில் விக்ரம் நடிக்க ‘காசி’யாக வெளி யானது. மிமிக்ரி, நாட்டுப்புறப் பாடல் பாடுவதிலும் வல்லவரான இவர், மிகப்பெரிய நடிகராக உரு வானபோதும் மேடைகளில் நாட்டுப் புறப் பாடல்கள் பாடுவதை நிறுத் தவே இல்லை.

அரசியலில் இடதுசாரி சிந்தனை யாளராக இருந்த கலாபவன் மணி, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கேரளத்தின் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடனான மதுவிருந் தின் போது மயங்கிவிழுந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக எர்ணா குளம் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட அவர், மார்ச் 6-ம்தேதி உயிரிழந்தார்.

இதனிடையே, கலாபவன் மணி யின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித் திருந்தார். இதனைத் தொடர்ந்து, கலாபவன் மணியின் உடல் கொச்சி ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. இதில், அவரது உடலில் ‘குளோரோபைரிபாஸ்' எனும் பூச்சிக்கொல்லி மருந்தும், ‘ஆர்கானோ பாஸ்பேட்' நச்சுப் பொருளும் கலந்திருப்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சி யாக, ஹைதராபாத்தில் நடந்த உடற்கூறாய்வில், அவரது உடலில் மெத்தனால் கலந்திருப்பதும் தெரியவந்தது.

கல்லீரல் பிரச்சினையிலேயே கலாபவன் மணி உயிரிழந்ததாக போலீஸார் கூறியிருந்தநிலையில், வேதிப்பொருள்கள் அவரது உட லில் இருந்ததால் சர்ச்சையானது. கலாபவன் மணியின் நெருங்கிய நண்பர்கள் ஆறுபேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத் தப்பட்டது. இதில், அவர்கள் கலா பவன் மணியை கொலை செய்ய வில்லை என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு நடவடிக்கையில் திருப்தியில்லாத கலாபவன் மணி யின் சகோதரர் ராமகிருஷ்ணன், சி.பி.ஐ விசாரணை கோரி எர்ணா குளம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை யடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, தற்போது 35 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

கலாபவன் மணிக்கு பச்சையாக காய்கறிகளை சாப்பிடும் பழக் கம் இருந்திருக்கிறது. அதன் வழி யாகவே, ‘குளோரோபைரிபாஸ்' வேதிப்பொருள் அவரது உடலுக் குள் சென்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி, மதுவுடன் எத்தனாலை யும் கலந்து குடிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது.

கல்லீரல் கெட்டுப்போனதால் அந்த எத்தனாலை அவர் உடலால் வெளியேற்ற முடியவில்லை. மேலும், தினமும் 15 ‘டின்' வரை பீர் குடிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. எனவே, தீவிர மது பழக்கத்தால்தான் கல்லீரல் பாதிக்கப்பட்டு கலாபவன் மணி இறந்திருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x