

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது ப.சிதம்பரம், மத்திய நிதிஅமைச்சராக பணியாற்றினார். அப்போது 111 விமானங்கள் வாங்கியது, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு வழித்தடங்களை ஒதுக்குவதில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
111 விமானங்கள் வாங்கியது, விமானப் போக்குவரத்து ஊழல் மற்றும் நிதிமுறைகேட்டால் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.