

தம் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பாஜகவின் தேசியத் தலைவரான அமித் ஷா நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். இதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள புதிய வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் போராட்டப் பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கிடைத்த தகவல்களின்படி, குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய கேரளாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது அதிக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக எதிர்ப்பு மாநிலங்கள் ஆளும் அரசுகளும் அதைப் பின்பற்றாதபடி செய்யவும் யோசிக்கப்பட்டுள்ளது.
எனவே, கேரள சட்டப்பேரவை தீர்மானத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் அளிக்காமல் மாநில அளவிலேயே ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீதான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்த பாஜகவின் எம்எல்ஏ, எம்.பி.மற்றும் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதால் அவர்களுடன் சமூகத்தில் பிரபலமானவர்களை அதில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் மற்றும் பிராந்திய மொழித் திரைப்படங்களின் நட்சத்திரங்களையும் சேர்க்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் வெளியான யோசனைகளின்படி, குடியுரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்விற்காக இலவச தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தச் சட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் இடையே ஆதரவு கிடைப்பதாக எண்ணும் பாஜக அதை நாட்டின் முன் வைக்கவும் திட்டமிட்டுள்ளது.