

அனைவருக்கும் வீடு கிடைக்கும் வகையில் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தேசிய குடியிருப்பு மசோதா 2013’ நிறை வேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மசோதாவை பிரதமர் மோடி அரசு, கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.
சமுதாயத்தில் சமநிலையை ஏற்படுத்தும் வகையில், அனைவருக்கும் உணவு, இருப்பிடம் ஆகியவை அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அனைவருக்கும் வீடு மற்றும் நிலம் அளிக்க வேண்டும் என ஏக்தா பரிஷத் உட்பட பல்வேறு அமைப்புகள் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போராடி வந்தன. இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருந்த மக்களவை தேர்தலை முன்னிட்டும் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2013 தொடக்கத்தில் மத்திய ஊரக வளர்ச்சித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேசிய குடியிருப்பு மசோதாவினால், முக்கியமாக நாட்டின் ஊரகப் பகுதியிலுள்ள அனைவருக்கும் வீட்டுடன் கூடிய நிலம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தற்போதுள்ள மோடி அரசு அதை நிறைவேற்ற முடியாமல் தள்ளிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மசோதாவின் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் அளிக்கப்பட்ட ஒரு மனுவுக்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், இந்திரா அவாஸ் யோஜனா வீட்டு வசதி திட்டத்தை கவனிக்கும் கிராமப்புற வீட்டு வசதித் துறைக்கு இந்த மசோதா மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிராமப்புற வீட்டு வசதித் துறையிடம் கேட்கப்பட்டபோது அது, கடந்த மே 2013-ல் சில சட்ட விளக்கங்கள் கேட்டு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “ஒருவருக்கு நிலம் அளிப்பது மாநில அரசு தொடர்புடைய விஷயமாக உள்ளது. இதனால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. இதற்கு முன் மத்திய அரசால் ஏழைகளுக்கு இலவசமாக நிலம் அளிக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருகிறோம். ஆனால் மத்தியில் புதிய அரசு அமைந்த பின்பும் இதில் எந்த முன்னேற்றமும் கிடைக்காததால் அந்த மசோதா நிலுவையில் உள்ளது” என்றனர்.
இந்த மசோதாவின்படி, வீடு இல்லாத ஊரகப்பகுதி ஏழைகளுக்கு பத்து ‘சென்ட்’டுக்கு (சுமார் 4,356 சதுர அடி) நிலம் அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசிடம் உள்ள 11-வது திட்டக்கால புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் சுமார் 1.8 கோடி குடும்பங்களுக்கு சொந்த நிலம் இல்லை, இதில் சுமார் 80 லட்சம் குடும்பங்களுக்கு சொந்த வீடு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க போதுமான நிலம் உள்ளதா என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது.