

ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் மோடி பாகிஸ்தானை இழுத்து, அந்த நாட்டைப் புனிதப்படுத்த நினைக்கிறார். அவர் என்ன அந்நாட்டின் தூதரா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க மாநிலம் கடுமையாக எதிர்த்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், என்ஆர்சியையும் தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில், சிலிகுரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது.
இதில் பங்கேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
''எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அனைத்து விஷயங்களுக்கும் பிரதமர் மோடி ஏன் பாகிஸ்தானை இழுத்து அந்நாட்டைப் புனிதப்படுத்தி வருகிறார்?
இந்தியா மிகப் பெரிய நாடு. உயர்ந்த கலாச்சாரங்கள், செழுமையான பாரம்பரியங்கள் நிறைந்தது. ஆனால், அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானை இழுத்து இந்தியாவுடன் ஒப்பிட்டு, பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் என்ன பாகிஸ்தானுக்குத் தாதுரா?
நாம் சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
என்ஆர்சி விவகாரத்தில் பாஜக வேண்டுமென்றே குழப்பத்தை விளைவித்து வருகிறது. அந்தக் கட்சியின் தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் என்ஆர்சி கொண்டுவரப்படாது என்று பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், மற்றொரு புறம் உள்துறை அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் நாடு முழுவதும் என்ஆர்சி கொண்டுவரப்படும் என்று பேசுகின்றனர்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.