Published : 03 Jan 2020 02:57 PM
Last Updated : 03 Jan 2020 02:57 PM

ஆந்திராவில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் நியமனம்

ஆந்திராவில் பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடித்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இவர் வீடு திரும்பும்போது லாரி டிரைவர்களிடம் சிக்கினார். அவர்கள் பிரியங்காவைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.

பிரியங்கா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த ஓரிரு நாளிலேயே அவர்கள் தப்பிச் சென்றபோது என்கவுன்ட்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடப்பதும், அதற்கான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறத் தாமதமாவதும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுவரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திர அரசு திஷா சட்டம் 2019 எனும் புதிய சட்டத்தை கடந்த ஆண்டு இயற்றியது.

இச்சட்டத்திற்காக ஆந்திர மாநில சட்டப்பேரவை, டிசம்பர் 13, 2019 அன்று, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரிக்கவும், குறிப்பாக பாலியல் குற்றங்களில் மரண தண்டனை வழங்குவதற்கும் இச்சட்டம் திஷா சட்டம் என பெயர் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

''ஆந்திராவின் திஷா சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 எஃப் மற்றும் 354 ஜி ஆகிய பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பிற பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையை விதிக்கிறது. சமூக அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பெண்களை துன்புறுத்தும் வழக்குகளில், முதல் தண்டனைக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது. இதற்காக ஐபிசி, 1860 இல் புதிய பிரிவு 354 இ சேர்க்கப்படும். இதுபோன்ற குற்றங்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் படைகளையும் அரசு நியமிக்கும்.

போக்சோ சட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஆசிட் தாக்குதல்கள், பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துதல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளின் மீதான விரைவான விசாரணையை உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து 13 மாவட்டங்களிலும் இதற்கென பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அரசு அமைக்கும்.

திஷா சட்டத்தை அமல்படுத்த இரண்டு பெண் அதிகாரிகளுக்கான புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அப்பதவிகளில் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் கிருத்திகா சுக்லா ஐஏஎஸ்ஸுக்கு திஷா சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுகிறது.

கர்னூலின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகப் (நிர்வாகம்) பணியாற்றி வரும் எம். தீபிகா ஐபிஎஸ்ஸுக்கு திஷா சிறப்பு அதிகாரியாக முழு பொறுப்பு அளித்து நியமிக்கப்படுகிறார்.

திஷா சட்டத்தின்படி பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை 21 நாட்களுக்குள் விரைந்து முடிப்பதை உறுதி செய்து மரண தண்டனை அளிக்கப்படும்''.

இவ்வாறு ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x