

தேசத்தின் வேகமான வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள், காப்புரிமை பெறுதல், உற்பத்தி செய்தல், வெற்றிகரமாக்குதல் அவசியம். இந்த 4 முன்னெடுப்புகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கர்நாடக மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று வந்தார். தும்கூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று 107-வது இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
''இந்தப் புத்தாண்டின், அடுத்த 10 ஆண்டுகளின் முதல் நிகழ்ச்சியே எனக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தொடர்புடைய பெங்களூருவில் இந்த அறிவியல் மாநாடு நடப்பது இன்னும் பெருமைக்குரியது.
2020-ம் ஆண்டைத் தொடங்கும் போது வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடனும், சாதகமான உணர்வுடன் தொடங்குகிறோம். நம்முடைய கனவுகளை நனவாக்க அடுத்தகட்ட முயற்சியாகும்.
தேசத்தின் வேகமான வளர்ச்சிக்கு 4 முக்கிய முன்னெடுப்புகள் அவசியமானவை. முதலாவது புதிய கண்டுபிடிப்புகள், 2-வதாக அந்த கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவதாகும். இந்த இரு விஷயங்களையும் செய்துவி்ட்டால், உற்பத்தியை எளிதாகச் செய்யலாம். அதன்பின் மக்களிடம் இந்தப் பொருட்களை எடுத்துச்சென்று செழிப்பைக் காணலாம்.
இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் பரப்பை அடுத்தகட்டத்துக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் வெற்றியைச் சார்ந்தே இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது.
உலக அளவில் கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் 52-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளைக் காட்டிலும், கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய திட்டமிடலால் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகத்துறை அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.