

மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், நாடகக் கலைஞருமான காஞ்சன மாலாவின் உடல் பெங்களூருவில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு நாடகக் குழுவினர்களும், தமிழ் அமைப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் பிறந்த காஞ்சன மாலா, இளமைக் காலத்தில் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தார். தனது 14 வயதில் தொடங்கி, 200-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
1985-ம் ஆண்டு புலவர் மகிபை பாவிசைக்கோ இயக்கிய, ‘விடுதலைப் புலிகள்' நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றார். பெங்களூருவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாடகம் மும்பையில் வரதாபாய் முதலியார் தலைமையில் போடப் பட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு லட்சக் கணக்கில் நிதி திரட்டி கொடுக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், காஞ்சன மாலாவை மனதார பாராட்டினார். மேலும், 'பாவேந்தர் கண்ட தமிழச்சி' என்ற நாடகத்தில் கதை நாயகியாக 51 முறை நடித்து, பல்வேறு விருதுகளை பெற்றார்.
இவர், கன்னடம், மராத்தி, துளு, இந்தி நாடகங்களிலும் பல முக்கிய வேடங்களில் நடித் துள்ளார்.
பெங்களூருவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் நாட்டிய ஆசிரியராகவும் பணியாற்றி ஏராளமான மாணவிகளுக்கு இலவசமாக பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனத்தை பயிற்றுவித்துள்ளார். மேலும் பெங்களூருவில் நடை பெறும் தமிழர் நலன் சார்ந்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரவலாக அறியப் பட்ட காஞ்சன மாலா (52), கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று முன் தினம் காலமானார்.
காஞ்சன மாலாவின் உடலுக்கு கர்நாடக நாடகக் கலைஞர்கள், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது உடல் கல்பள்ளி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.