

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. கடந்த 30-ம் தேதி மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 கட்சிகளை சேர்ந்த 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
அமைச்சர் பதவி கிடைக்காத சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏக்கள் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த குழப்பம் காரணமாக புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் பதவி விவகாரத்தால் கூட்டணி அரசில் குழப்பம், பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். அமைச்சரவையில் எல்லோருக்கும் இடம் அளிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி தனது கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி (பாஜக) பூரிப்படைந்திருக்கிறது. கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின்போதும் அமைச்சர் பதவி விவகாரத்தால் இதேபோன்ற குழப்பம் ஏற்பட்டதை நினைவுபடுத்துகிறோம்.
இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.