

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டப்படி செல்லாது என அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, “நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் அரசியல் சாசனக் கடமை” என கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று கூறும்போது, “கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படியோ அல்லது சட்டப்படியோ செல்லாது. ஏனெனில், குடியுரிமை விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளா பிரிவினையால் பாதிக்கப்படவில்லை. இங்கு சட்டவிரோத குடியேறிகள் இல்லை. கேரளாவுக்கு பிரச்சினை இல்லாத விவகாரத்தில் இவர்கள் தலையிடுவது ஏன்?” என்றார். - பிடிஐ