

அயோத்தி ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தி விவகாரத்தை மட்டும் கவனித்துக் கொள்ளக் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் தனியாக ஒரு அதிகாரியை மத்திய அரசு நியமித்துள்ளது.
கூடுதல் செயலாளர் ஞானேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்துறையைக் கவனித்து வந்தவர் ஞானேஷ் குமார்தான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில் முக்கியமான அதிகாரியாகச் செயல்பட்டவர் ஞானேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990களிலும், 2000 ஆண்டுகளிலும் உள்துறை அமைச்சகத்தில் அயோத்தி பிரிவு என்று தனியாக அமைக்கப்பட்டு அதை மட்டும் கவனிக்க அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் லிபரான் கமிஷன் அறிக்கை அளித்தபின் அந்த பிரிவு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகார வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதியளித்தது. அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், இந்த தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்குள் ஒரு குழுவையும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தற்போது கூடுதல் செயலாளர் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இனிமேல் அயோத்தி விவகாரங்கள் தொடர்பாக அனைத்து விஷயங்களையும் புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் செயலாளர்தான் கவனிப்பார்.
இதற்கிடையே அயோத்தியில் மசூதி கட்டுவதற்கென தனியாக இடம் ஒதுக்கும் வகையில் 3 இடங்களைத் தேர்வு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரப்பிரதேச அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த இட விவகாரத்தையும், கூடுதல் செயலாளர்தான் இனிமேல் கவனிப்பார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " கூடுதல் செயலாளர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரி தலைமையில்தான் இனிமேல் அயோத்தி விவகாரங்கள் அனைத்தும் கவனிக்கப்படும்" எனத் தெரிவித்தார்