

உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்தில் உத்தரப் பிரதேச போலீஸார் செய்த கேலிக்கூத்து வெளியாகியுள்ளது. பெரோஸாபாத்தில் ஆறு வருடங்களுக்கு முன் இறந்து போனவர் வீட்டிற்கு நேரில் சென்று கைது வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீது நாடு முழுவதிலும் போராட்டம் தொடர்கிறது. இதில், குறிப்பாக உ.பி.யின் பல நகரங்களில் நிகழும் போராட்டம் கலவரமாக வெடித்து பல உயிர்கள் பலியாகி வருகின்றன.
இந்நிலையில், உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள பெரோஸாபாத்திலும் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், பொதுமக்கள் மற்றும் உ.பி. போலீஸாருக்கு இடையே மோதலும் வெடித்தது.
இதற்குக் காரணமானவர்கள் எனப் பொதுமக்களில் பலரையும் கைது செய்த போலீஸார் அதில் மேலும் சில பெயர்களைச் சேர்த்தனர். பிறகு அவர்களின் வீடு தேடிச் சென்று கைது வாரண்ட்டுகளை அளித்து வந்தனர்.
இவர்களில் தம் வீடுகளில் இல்லாதவர்களின் கதவுகளில் அந்த வாரண்ட்டுகளின் நோட்டீஸ்களை ஒட்டி வைத்தனர். இந்தப் பட்டியலில் பெரோஸாபாத்தின் பஜார்வாலி கல்லியில் பனேகான் என்பவர் பெயரும் இடம் பெற்றிருந்தது.
பனேகானைத் தேடி கடந்த டிசம்பர் 25-ல் பஜார்வாலி கல்லிக்கு நேரில் சென்ற போலீஸார் வீடு பூட்டி இருந்தது தெரியவந்தது. எனினும், அருகிலுள்ளவர்களிடம் விசாரிக்காத போலீஸார் மீண்டும் அந்த வீட்டிற்கு நேற்று வந்த போது பனேகான் இறந்து ஆறு வருடங்கள் ஆகி இருப்பது தெரிந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பனேகானின் மகனான முகம்மது சர்பராஸ் கான் கூறும்போது, ''ஆறு வருடங்களுக்கு முன் இறந்த எனது தந்தை போராடியதாக ஐபிசி 107, 116 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கூறிய போலீஸார் எனது தந்தை ஆறு நாட்களில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்காவிட்டால் சிறையில் தள்ளப்படுவார் எனவும் கூறினர். இவர்களிடம் தந்தையின் மரணச் சான்றிதழை எடுத்துக் காட்டியமைக்கு என்னைக் கடுமையாக ஏசிவிட்டு சென்றனர்'' எனத் தெரிவித்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்பாகவே இறந்து விட்டதால் பனேகான் உ.பி. போலீஸாரின் கைதில் இருந்து தப்பி விட்டார். ஆனால், உயிருடன் இருக்கும் அவரது வயதான நண்பர்களுக்கு நடமாட முடியாத நிலையில் கைது வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரான பஹாத் மீர் கான் (93), மசூதியில் இமாமாக இருக்கும் சூபி அன்சார் உசைன் (90) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தமது தள்ளாத வயதில் எங்கும் வெளியில் செல்ல முடிவதில்லை.
எனினும், பஹாத்தும், உசைனும் தம் பிள்ளைகள் உதவியால் நீதிமன்றம் சென்று ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு குடியுரிமை போராட்ட விவகாரத்தை தவறாகக் கையாளும் உ.பி. அரசை காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து பெரோஸாபாத் மாவட்ட ஆட்சியரான குன்வார் பங்கஜ் சிங் கூறும்போது, ''எங்கள் தலைமை அதிகாரியிடம் வரும் அதிகமான வற்புறுத்தல் காரணமாக இதுபோல் சில தவறுகள் நடந்துள்ளன. இவற்றை விசாரணையில் கண்டறிந்து அவர்களின் பெயர்கள் போராட்ட வழக்குகளில் இருந்து நீக்கப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதுபோல், பல்வேறு வகை புகார்கள் உ.பி.யின் வேறு பல மாவட்டங்களிலும் வெளியானபடி உள்ளது. இதற்கு குடியுரிமை திருத்தச் சட்டப் பேராட்டக்காரர்கள் மீது உ.பி. போலீஸார் நிதானம் இன்றி செயல்படுவது காரணமாகவும் கருதப்படுகிறது.